திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை |
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.
|
1 |
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.
|
2 |
பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரனெறி யாவது
நணுகு நாதன் நகர்திரு நல்லமே.
|
3 |
தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே.
|
4 |
உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.
|
5 |
அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
|
6 |
மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.
|
7 |
வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே.
|
8 |
கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.
|
9 |
மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |